காணாமல்போயுள்ள கடற்றொழிலாளர்களை தேடுவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து
முல்லைத்தீவு - புதுமாத்தளன் பகுதியிலிருந்து கடந்த 26 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்று காணாமல்போயுள்ள கடற்றொழிலாளர்கள் மூவரையும் தேடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் காணாமல்போன கடற்றொழிலாளர்கள் தொடர்பில் கடற்படை மற்றும் கரையோரப் பாதுகாப்புபடை உள்ளிட்ட உரிய தரப்புக்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காணாமல்போன கடற்றொழிலாளர்களை தேடுவதற்கான நடவடிக்கைகள் உரியதரப்பினரால் மேற்கொள்ளப்படுமெனவும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு ஆகியோர் தகவல் வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு
புதுமாத்தளன் பகுதியிலிருந்து மூன்று கடற்றொழிலாளர்கள் கடந்த 26ஆம் திகதி காலை MLT/1742 என்னும் இலக்கப் படகில் தூண்டல் தொழிலுக்காக கடலுக்கு சென்ற நிலையில் இதுவரை கரைதிரும்பவில்லை.
குறிப்பாக புதுமாத்தளன் பகுதியைச்சேர்ந்த அன்ரனிஜூட், யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த ஸ்ரீபுஸ்பராசா, மன்னாரைச் சேர்ந்த முகம்மட் ரிஸ்வான் ஆகியோரே இதுவரை கரைதிரும்பவில்லை.
இந்த விடயம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த பகுதிக்கு நேற்று நேரடியாகச்சென்று நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டுள்ளார்.
தற்போது கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதால் காணாமல்போன கடற்றொழிலாளர்களை தேடி ஏனையவர்களும் செல்வது பாதுகாப்பாக இருக்காதென அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் தமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இதன்போது கடற்றொழிலாளர்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடற்றொழில் அமைச்சருக்கும் இது தொடர்பில் தகவல் வழங்கியதுடன், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு ஆகிய தரப்பினருடன் இந்த விடயம் தொடர்பில் தொலைபேசியில் கலந்துரையாடினார்.
அதற்கமைய காணாமல்போன கடற்றொழிலாளர்களை தேடுவதற்கு உதவி கோரப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் மற்றும் முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தெரிவித்துள்ளது.
உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை
இதேவேளை, கடற்றொழிலுக்கு சென்று காணாமல்போயுள்ள கடற்றொழிலாளர்கள் மூவரையும் தேடுடித்தருமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
காணாமல்போன கடற்றொழிலாளர்கள் தொடர்பில் கடற்படை மற்றும் கரையோரப் பாதுகாப்புபடை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உரிய தரப்புக்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
காணாமல்போன கடற்றொழிலாளர்களை தேடுவதற்கான நடவடிக்கைகள் உரியதரப்பினரால் மேற்கொள்ளப்படுகிறதா இல்லையா என்பது தமக்கு தெரியாது என்றும் கடற்படை மற்றும் விமானப்படை மூலமாக அவர்களை தேடி தருமாறு உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


