ரவி கருணாநாயக்கவின் வழக்கு விவகாரம்: உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு (Ravi Karunanayake) எதிரான உயர்மட்ட லஞ்ச வழக்கில் மேன்முறையீடு செய்வதற்கு இலங்கை உயர்நீதிமன்றம் சிறப்பு அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கானது, இன்று (24.05.2024) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
முதன்மை வியாபார நிறுவனமொன்றின் பணிப்பாளரான அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து ரவி கருணாநாயக்க, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை லஞ்சமாக பெற்றார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு
இந்நிலையிலேயே, ரவி கருணாநாயக்கவின் மீது, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை மேன்முறையீடு செய்வதற்கான சிறப்பு அனுமதியை லஞ்ச ஆணைக்குழு உயர்நீதிமன்றில் கோரியிருந்தது.
முன்னதாக, லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் இந்த விண்ணப்பத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்த நிலையில், ஆணைக்குழு உயர்நீதிமன்றில் முறையிட்டது.
எனினும், இலஞ்ச சட்டத்தின் கீழ் ரவி கருணாநாயக்கவை பொது ஊழியராக கருத முடியாது என கருணாநாயக்கவின் தரப்பால் உயர்நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது அதிகாரி
மேலும், அரசியலமைப்பின் 170ஆவது பிரிவின்படி, அமைச்சர்களை பொது அதிகாரிகள் என்ற வரையறைக்குள் கொண்டு வரமுடியாது எனவும் குறிப்பிடப்பட்டது.
எவ்வாறாயினும், இதனை நிராகரித்த உயர்நீதிமன்றம், முன்னாள் நிதியமைச்சர் பொது ஊழியர் வரம்பிற்குள் அடங்குவார், எனவே லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்படலாம் என தீர்ப்பளித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |