தனிநபர் கையில் அதிகாரம் ஆபத்து - ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு
நாட்டில் தனிநபர் ஒருவரின் கையில் அதிகாரம் குவிந்திருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
எனவே, 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம்
இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றத்தின் 75 ஆவது ஆண்டு பவள விழாவினை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ‘வித்தக விழா’ நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:- "உலகம் முழுவதும் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், வல்லரசு நாடுகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அக்கிரமங்களை இழைத்து வருகின்றன.

இதனால் சர்வதேச ரீதியில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இத்தகைய சர்வதேச யுத்தங்களினால் இலங்கை போன்ற சிறிய நாடுகளே பொருளாதார ரீதியாகப் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கின்றன.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நாம், வரும் ஆண்டுகளில் பில்லியன் கணக்கிலான கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய சவாலான நிலையில் இருக்கின்றோம்.
தற்போதைய ஆட்சியாளர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்ற வாக்குறுதியுடனேயே ஆட்சிக்கு வந்தனர்.
ஆனால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கையில் இருக்கும்போது அத்தகைய மாற்றத்தைச் செய்வார்களா என்பது சந்தேகமே.
சட்டத்தரணி ஒருவர் கொல்லப்பட்டபோது
தமக்குக் கிடைத்துள்ள எல்லையற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் சாசனத்தில் எதேச்சதிகார மாற்றங்களைச் செய்ய முயற்சிகள் நடப்பதாகத் தெரிகின்றது.

சர்வாதிகாரப் போக்கு இலங்கையில் ஒழிக்கப்பட வேண்டும். நீதிமன்றக் கட்டமைப்பு மற்றும் அரசியல் சாசன விவகாரங்களில் தற்போதைய ஆட்சியாளர்களின் போக்கு அவதானிக்கப்பட வேண்டியது.
அரசியல் சாசனத்தில் கை வைக்கப்படும்போதும், ஜனநாயக விழுமியங்கள் மீறப்படும்போதும் அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதில் சட்ட மாணவர்களும் சட்டத்தரணிகளும் முன்னிலையில் இருக்க வேண்டும்.
கொழும்பில் அண்மையில் சட்டத்தரணி ஒருவர் கொல்லப்பட்டபோது காட்டிய அதே வேகத்தையும் ஒற்றுமையையும் அரசியல் சாசனப் பாதுகாப்பிலும் நாம் காட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு இவ்வாறான அரசியல் மற்றும் சட்ட விவகாரங்களில் தெளிவூட்டுவது சட்ட சமூகத்தின் தார்மீகப் பொறுப்பாகும்." - என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri