தன்னிச்சையாக செயற்படும் தோட்ட உரிமையாளர்கள்: உரிய நடவடிக்கை எடுக்க சபாநாயகர் வலியுறுத்து
"தோட்ட உரிமையாளர்கள் தன்னிச்சையாகச் செயற்படுகின்றார்கள். ஆகவே, இப்பிரச்சினைகள் குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுங்கள்." என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன, பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (22.08.2023), மாத்தளை - ரத்வத்த தோட்டத்தில் தற்காலிக குடியிருப்பு ஒன்றை அந்தத் தோட்டத்தின் உதவி முகாமையாளர் பலவந்தமான முறையில் அகற்றிய சம்பவம் தொடர்பில் விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ரமேஷ் பத்திரண விசேட உரையாற்றினார்.
தன்னிச்சையான தோட்ட உரிமையாளர்கள்
அமைச்சரின் உரையைத் தொடர்ந்து சபாநாயகர் மேற்கண்டவாறு கோரிக்கையை முன்வைத்தார். சபாநாயகர் மேலும் தெரிவித்ததாவது,
"இவ்வாறான பிரச்சினைகள் எமது மாவட்டத்திலும் (மாத்தறை) இடம்பெறுகின்றன. தோட்ட உரிமையாளர்கள் தன்னிச்சையான முறையில் செயற்படுகின்றார்கள்.
அவர்கள் தோட்ட மக்களை வாழ விடுவதில்லை. மின்சாரம், நீர் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அவர்கள் தடைகளை ஏற்படுத்தியுள்ளார்கள்.
ஆகவே, எமது மாவட்டத்தில் உள்ள தோட்டப்புற மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுங்கள்." என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




