வெளிநாடு செல்லும் ரஞ்சன் ராமநாயக்க
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வெளிநாடு செல்ல உள்ளதாக தெரியவருகிறது.
இரண்டு வாரங்கள் தங்கியிருப்பதற்காக அவர் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ரஞ்சன்
ரஞ்சன் ராமநாயக்க நேற்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நிபந்தனையுடன் நேற்று விடுதலை செய்யப்பட்டார். அத்துடன் ஏழு ஆண்டுகள் அவர் அரசியலில் ஈடுபட முடியாத தடையேற்பட்டுள்ளது. அவர் அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
எனினும் அரசியலில் ஈடுபடுவதற்கு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு முழுமையான விடுதலை கிடைக்கும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போது அவருக்கு ஜனாதிபதியின் முழுமையான பொது மன்னிப்பு கிடைக்கவில்லை. எனினும் தேவையான சந்தர்ப்பத்தில் தேர்தலில் போட்டியிட இடமளிக்க முடியும்.
பொன்சேகாவுக்கு போல் ரஞ்சனுக்கும் முழுமையான விடுதலை கிடைக்கும்
இதற்கு முன்னர் சரத் பொன்சேகாவுக்கும் இரண்டு தடவைகளிலேயே ஜனாதிபதியின் முழுமையான பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. முதலில் தண்டனை இரத்துச் செய்யப்பட்டது.
அதன் பின்னர் முழுமையான விடுதலை வழங்கப்பட்டது. இதேபோல் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்படலாம் எனவும் விஜேதாச ராஜபக்ச கூறியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கியது.
தண்டனைக் காலம் ஒரு வருடமும் 7 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
அதேவேளை ரஞ்சன் ராமநாயக்க வெளிநாடுகளில் தொழில் புரியும் தொழிலாளர்கள் சம்பந்தமான நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியிலும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு முக்கிய பொறுப்புகள்
People’s hero @RamanayakeR will be made a member of the @sjbsrilanka working committee and a member of the SJB parliamentary group. He will also spearhead the anti corruption effort of the SJB.. pic.twitter.com/7aMNHDYx20
— Sajith Premadasa (@sajithpremadasa) August 27, 2022
இதனிடையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் உறுப்பினராகவும் நியமிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரஞ்சன் ராமநாயக்க தலைமை தாங்குவார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.