ராஜபக்சர்கள் எனக்கு எதிரி அல்ல: ரணில் அறிவிப்பு
ராஜபக்சர்களுக்கு நான் எதிரி அல்ல. அவர்களும் எனக்கு எதிரி அல்ல. அவர்களிடமிருந்து நான் பிரதமர் பதவியையோ, ஜனாதிபதி பதவியையோ பறித்தெடுக்கவில்லை.நாடு எதிர்நோக்கிய நெருக்கடியான கட்டத்தில் அவர்களே எனக்கு பதவிகளை தந்து ஒதுங்கி நின்றார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தல்
"தற்போதைய அரசுக்கு ராஜபக்சர்கள்
பூரண ஆதரவை வழங்குகின்றார்கள். இதனை நான்
வரவேற்கின்றேன். இந்த அரசுக்குள் எந்தவித முரண்பாடுகளும் இல்லை.
அரசியல் இலாபம் கருதி சில ஊடகங்கள் வெளியிடும் பொய்யான செய்திகளை எமது மக்கள் நம்பமாட்டார்கள் என்று நான் நினைக்கின்றேன்.
ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நடைபெறும். அந்தத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நான் இன்னமும் முடிவு எடுக்கவில்லை. என்னைப் பொது வேட்பாளராகப் போட்டியிடுமாறும் சிலர் பரிந்துரைத்துள்ளனர்.
இதேவேளை, மொட்டுக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்குவாரா? இல்லையா? என்பது தொடர்பில் என்னால் பதில் கூற முடியாது. அது தொடர்பில் அந்தக் கட்சியின் தலைமையிடம்தான் கேட்க வேண்டும்.
நெருக்கடியான கால கட்டத்திலும் இந்நாட்டு மக்களுக்காக நான் பணியாற்றுகின்றேன். பலரும் எனக்கு ஆதரவு வழங்குகின்றார்கள். அந்த ஆதரவு தொடர்ந்து கிடைக்க வேண்டும்.
நாடு மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருகின்றது. எனவே, எதிரணியினரும் கட்சி வேறுபாடுகளைக் களைந்து அரசின் வேலைத்திட்டத்தில் ஒன்றிணைய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |