சர்ச்சைக்குள்ளான ரணிலின் தீர்மானத்தை வரவேற்கும் அரசியல்வாதி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் சரியான தீர்மானமாகும். அரசியல்வாதியென்ற வகையில் நான் அதை ஏற்றுக்கொள்கின்றேன் என முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவசர காலச்சட்டம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அன்றைய காலகட்டத்தில் நாடு ஸ்தம்பிதமடைந்திருந்தது. நாடாளுமன்றத்தை கைப்பற்றும் நோக்கில் போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்திருந்தனர். ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் விநியோகம் முழுவதும் தடைப்படிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றவதற்காக பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவரசகாலச்சட்ட சரியானதாகும் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்ட விதிமுறைகளினால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை (23) தீர்ப்பளித்திருந்தது.
இதற்கமைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 2 ஆவது விதிமுறையின் கீழ் பிரகடனப்படுத்திய அவசரகால சட்ட விதிமுறைகள் தன்னிச்சையானதும் அதிகாரமற்றதுமான செயற்பாடென மூன்று நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



