நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி! மீள்வதற்கு பெருந்தொகை அமெரிக்க டொலர்கள் தேவை - ரணில் எச்சரிக்கை
எதிர்காலத்தில் பொருளாதார நிலைமை மேலும் மோசமடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதனை மீளக் கட்டியெழுப்புவதற்கு பெருந்தொகையான அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் சூம் தொழிநுட்பத்தின் ஊடாக கலந்துரையாடிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பங்களாதேஷிடம் பெற்றுக் கொண்ட நிதி வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும், சீனாவிடம் யுவான்களில் பெற்றுக் கொண்ட கடனை அமெரிக்க டொலர்களில் திருப்பிச் செலுத்த நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கிடைக்கப் பெற்ற நிதியானது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண போதுமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் நாட்டின் பொருளாதாரம் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.