உள்ளூராட்சி மன்ற தேர்தலை தடுப்பது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல்:சி.கா.செந்திவேல்
ரணில் நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற கடமை ஏற்றதாகக் கூறி இன்று ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாக, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த விடாமல் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என புதிய மாக்சிச லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது கட்சிக்காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் பொருளாதார நெருக்கடி
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“இன்று நாடு அனுபவித்துக் கொண்டிருக்கின்ற அரசியல் பொருளாதார நெருக்கடிகள் என்பது மிக உச்சமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதை நாங்கள் கடந்த கால அனுபவங்களூடாக காணக் கூடியதாக உள்ளது.
இந்த அரசாங்கம் ரணில் விக்ரமசிங்க தலைமையின் கீழ் உள்ளது. உண்மையில் இந்த ஜனாதிபதி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை.
அவர் மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவராக இருந்தார். மாறாக அவர் மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவராகவே இருந்தார்.
ஆனால் அவருடைய குறுக்கு வழிகளின் மூலம் இந்த பொதுஜன பெரமுன என்ற கட்சியோடு இணங்கி செயல்பட்டதன் மூலமாக குறுக்கு வழிகளால் ஜனாதிபதியாக நாடாளுமன்றம் சென்ற ஒருவராக காணப்படுகின்றார்.
அரசியல் கதிரைகள்
எல்லோருக்கும் தெரிந்தது போல் அரகலய எனப்படும் காலி முகத்திடல் போராட்டம் மூலம் அரசியல் கதிரைகள் அகற்றப்பட்டதன் பின்னர், அதேபோல் ராஜபக்ச குடும்பத்தினர், அமைச்சர்கள் அகற்றப்பட்டதன் பின்னர் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்ற ஒரு பாதுகாவலனாகவே பதவியேற்று இருந்தார்.
அவர் உண்மையாக இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தையோ அதேபோல் இந்த மக்களினுடைய அடிப்படை பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்க்கின்ற ஒரு தீர்வாளராக இவர் வந்ததில்லை.
இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்ற பொருளாதார பிரச்சினைகள் , அரசியல்
நெருக்கடிகள் ஏனைய சமூகப் பிரச்சினைகள், எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமாக
இருக்கக் கூடிய இந்த ஆட்சி மிக மோசமான ஆட்சியாக போய்க் கொண்டிருப்பதை
காணக்கூடியதாக உள்ளது"என தெரிவித்துள்ளார்.




