சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நிராகரிப்பவர்களுக்கு ஜனாதிபதியின் கடுமையான ஆலோசனை
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நிராகரிக்கும் அனைவரும் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதற்கான முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையாக தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்றைய தினம் (17.12.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
நாட்டை மீட்பதற்கான முன்மொழிவு
அவ்வாறின்றி சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நிராகரிக்கும் அனைவரும் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதற்கான முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும்.
எனவே, பொறுப்புக்களை ஏற்காமல் மக்களை மகிழ்விக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடும் அரசியலானது நாட்டை மீண்டும் பாதாளத்துக்கு இழுத்துச் செல்லும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தற்போது சர்வதேச நாணய நிதியம் வழங்கியிருக்கும் உத்தரவாதத்தின்படி, இலங்கையின் கடன் மீள்செலுத்துகை ஆற்றல் முன்னேற்றமடைந்து வருவதாகக் கூறப்பட்டிருக்கின்றது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்துக்கு உண்மையாக இருந்தால் மாத்திரமே, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இப்போது எமக்கு சலுகை அளிக்கும் நாடுகள் தொடர்ந்து அதனை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |