இலங்கை குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்
தற்போது சர்வதேச நாணய நிதியம் வழங்கியிருக்கும் உத்தரவாதத்தின்படி, இலங்கையின் கடன் மீள்செலுத்துகை ஆற்றல் முன்னேற்றமடைந்து வருவதாகக் கூறப்பட்டிருக்கின்றது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றுவதன் காரணமாக ஜப்பான், சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் நாடுகள் என்பன இலங்கைக்கு கடன் சலுகை வழங்குவதற்கு இணங்கியுள்ளன.
இலங்கைக்கு கடன் சலுகை
எனவே கடன் மறுசீரமைப்பின் ஊடாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு 10 பில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட கடன் சலுகை எமக்கு கிடைக்கப்பெறுமென எதிர்பார்க்கின்றோம்.
இதேவேளை நாம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்துக்கு உண்மையாக இருந்தால் மாத்திரமே, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இப்போது எமக்கு சலுகை அளிக்கும் நாடுகள் தொடர்ந்து அதனை வழங்கும்.
மாறாக நாம் இந்த திட்டத்திலிருந்து விலகுவதாக இருந்தால், வருடாந்தம் 6 பில்லியன் டொலர் கடன் தொகையை மீளச்செலுத்துவதற்கான இயலுமை எமக்கு இருக்க வேண்டும். இதனை பொதுமக்கள் புரிந்துகொள்வதும், அதற்கேற்றவாறு செயற்படுவதும் அவசியமாகும்."என கூறியுள்ளார்.