ரணிலின் உரையில் தவறு!! மறுப்பு வெளியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம்!
ரணிலின் உரையில்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தவறானது என்றும் அது, நடந்தவற்றின் உண்மையான பிரதிபலிப்பு அல்ல என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் உத்தேச திருத்தங்கள் தொடர்பில் பிரதமர் கூறியது போன்று தமது அமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சட்டத்தரணிகள் சங்க அறிக்கையின்படி, கடந்த புதன்கிழமையன்று பிரதமர் ஆற்றிய உரையில், “சட்டத்தரணிகள் சங்கம், மே 8ஆம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்து அவருடன் இணக்கப்பாட்டுக்கு வந்தது. நீங்கள் 19வது திருத்தத்தை மீளமைத்தால் குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கினால் நீங்கள் தொடர்ந்து ஜனாதிபதியாக இருக்க முடியும்” என்று இணக்கமே அது என்று பிரதமர் கூறியிருந்தார்.
இந்தநிலையில் கடந்த மே 8 ஆம் திகதியன்று தமது நிர்வாகக் குழு ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்தமை தொடர்பிலான தகவல்களை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.
உடன்படிக்கை இல்லை
இதன்படி ஜனாதிபதிக்கும், சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் இடையில் ஒரு உடன்படிக்கை ஏற்படவில்லை.
அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் 19 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு ஜனாதிபதி உடன்பட்டால் அவர் பதவியில் நீடிக்க முடியும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதிக்கு வழங்கவில்லை என்றும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.