ரணிலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம்: செயலாளர் நாயகம் அறிவிப்பு
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்க தற்போது ஜனாதிபதியாகப் பதவியேற்றிருப்பதால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு |
ரணில் இராஜினாமா
ரணில் விக்ரமசிங்க இந்நாட்டின் ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இதனால் 2022 யூலை 21ஆம் திகதி முதல் அதாவது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்வதாகவும் ரணில் விக்ரமசிங்க கடிதம் மூலம் தனக்கு அறிவித்திருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 66 (இ) உறுப்புரையின் பிரகாரம் ஒன்பதாவது நாடாளுமன்றத்தில், உறுப்பாண்மையில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதனால் 1988ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) பிரிவின் கீழ் நாடாளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.