ரணிலின் புதிய வியூகம் தேசிய அரசாங்கத்தை நோக்கியதா?
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியை மறுசீரமைத்து, தேசிய அரசாங்கமொன்றை உருவாக்கும் வியூகத்தை வகுத்து வருவதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக செயற்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் முக்கிய பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணர்தன, சட்டத்தரணி சிரால் லக்திலக்க, குணரத்ன வன்னிநாயக்க, மேல் மாகாண மன்னாள் ஆளுநர் அசாத் சாலி, தென் மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்ன கோன் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தேசிய அரசாங்கமொன்றை அமைக்க வருமாறு அழைப்பு வந்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பலர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், தேசிய அரசாங்கம் அமைப்பது பற்றியோ கட்சியின் முன்னாள் முக்கிய செயற்பாட்டாளர்கள் கட்சிக்கு திரும்புவது குறித்தோ ரணில் அதிகாரபூர்வமாக எந்தவிதமான அறிவிப்பினையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.