இதயத்தில் ரணிலுக்கு பாரிய பிரச்சினை! நீதிமன்றில் வெளியாகிய அறிக்கை
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்தார்.
50 இலட்ச ரூபாய் பெறுமதியிலான மூன்று சரீர பிணையில் ரணில் விக்ரமசிங்க செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நிலை சிக்கல்
இந்நிலையில் குறித்த வழக்கானது எதிர்வரும், ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த வழக்கின் zoom தொழினுட்பம் மூலம் வழக்கில் முன்னிலையாகியிருந்தார்.
அவரது உடல்நிலை சிக்கல் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பொது சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்று (26) நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் துறை சார்பாக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் முன்னிலையானார். சந்தேக நபரான ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன மற்றும் அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட தரப்பு குழு முன்னிலையானது.
இந்நிலையில் வழக்கில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைக்கள தரப்பு ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை வழங்குவதை எதிர்த்திருந்தது.
கடிதத்தின் சட்டப்பூர்வத்தன்மை
இதற்கிடையில், அழைப்புக் கடிதத்தின் சட்டப்பூர்வத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்கு உண்மைகளை முன்வைத்திருந்தார்.
சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி பிரிட்டனுக்கு மேற்கொண்டதாகக் கூறப்படும் விஜயம், தனிப்பட்ட விஜயம் அல்ல என அவர் கூறினார்.
மாறாக உத்தியோகபூர்வ விஜயம் என்பதைக் காட்டுவதற்காக சமர்ப்பித்த அழைப்புக் கடிதத்திற்கு சட்டப்பூர்வ செல்லுபடியாகாது என்பதால், முன்னாள் ஜனாதிபதிக்கு பிணை வழங்குவதை மறுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் பொது நிதி ரூ.1.66 பில்லியன் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் இது உள்ளது என கூறியுள்ளார்.
இந்நிலையில் எதிர் வாதங்களை முன்வைத்த சட்டத்தரணி திலக் மாரப்பன, எனினும், இந்த சம்பவத்தை தணிக்கை செய்ய ஜனாதிபதி செயலகத்தின் தணிக்கை அதிகாரிக்கு அதிகாரம் இல்லை என்று சட்டத்தரணி திலக் மாரப்பன நீதிமன்றத்தின் முன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஏற்பட்ட அனைத்து செலவுகளும் ஜனாதிபதி செலவுகள் என்றும், தேசிய தணிக்கை அலுவலகம் நடத்திய தணிக்கையில் எந்த முறைகேடும் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அடைபட்ட இதயம்
ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, முன்னாள் ஜனாதிபதியின் இதயத்தில் உள்ள நான்கு முக்கிய தமனிகளில் மூன்று அடைபட்டுள்ளதாகக் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டக் குழு, அவருக்கு பிணை பெறுவதற்காக தற்போது நீதிமன்றத்தில் பல குறிப்பிட்ட விடயங்களை முன்வைத்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இதயத்தில் உள்ள நான்கு முக்கிய தமனிகளில் மூன்று அடைப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, அந்த மருத்துவ நிலைமைகள் தொடர்பான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி சிறிது காலமாக நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது இதய திசு இறப்பு மற்றும் நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு கடுமையான ஆபத்து இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



