யாழில் ரணிலுக்கு எதிராகப் போராடியவர்களைக் கைது செய்யும் படலம் ஆரம்பம்! (Photos)
அரகலய போராட்டக்காரர்களை அடக்கிய பாணியில் தைப்பொங்கல் தினமன்று யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடியவர்களைக் கைது செய்யும் படலத்தை பொலிஸார் ஆரம்பித்துள்ளார்கள்.
தென்னிலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய அரகலய போராட்டக்காரர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகக் கொடூரமான முறையில் தான் ஆட்சிக்கு வந்ததும் ஒடுக்கி போராட்டக்காரக்களைக் கைது செய்திருந்தார்.
யாழில் மிகப் பெரிய போராட்டம்
வேலன் சுவாமிகள் நேற்று (18.01.2023) மாலை கைது செய்யப்பட்டு இரவு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் போராட்டத்தில் மேலும் சிலரும் கைதாகலாம் எனத் தெரியவருகின்றது.
எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி அம்பாறையில் ஆரம்பித்து பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர நாளில் யாழ்ப்பாணத்தில் மிகப் பெரிய போராட்டம் ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதில் சிவில் சமூகத்தினர் கலந்துகொள்வதைத் தடுப்பதற்காகவே இந்தக் கைது இடம்பெற்றிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
வேலன் சுவாமிகள் கைது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய தைப்பொங்கல் விழாவுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் - நல்லூருக்கு வந்தபோது அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
''சட்டவிரோதமாகக் கூட்டம் நடத்தியமை, ஜனாதிபதிக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டியமை, பொலிஸார் பேரணியைத் தடுத்தபோது அவர்களுக்கு இடையூறு விளைவித்தமை, பொலிஸாருக்கு காயம் விளைவித்தமை'' போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நேற்று (18.01.2023) மாலை கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வரும் பொத்துவில் டக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றிரவு முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்ப்புப் போராட்டம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்துகொண்ட போது யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டத்தின் போது பொலிஸார் தடுப்புக்களை ஏற்படுத்தி இருந்தனர்.
பொலிஸாரின் தடுப்புக்களைத் தாண்டிச் செல்ல போராட்டக்காரர்கள் முற்பட்டனர்.
அதன்போது பொலிஸார் அவர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது பொலிஸாருக்கும் - போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில் கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல்களுக்கு அமைவாக
நேற்று (18.01.2023) மாலை வேலன் சுவாமியின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அவரை யாழ்ப்பாணம்
பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்திருந்தார்கள்.
விசாரணைகளின் பின்னர் அவரைக் கைது செய்தனர். உடனடியாகவே அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
வேலன் சுவாமிகளுக்கு பிணை
இதன்போது அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான வி.மணிவண்ணன், க.சுகாஷ், சி.சிவசிறி ஆகியோர் முன்னிலையாகினர். மன்றில் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் வேலன் சுவாமிகளுக்கு பிணை வழங்கப்பட்டது.
வழக்கு முடிவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், "எதிர்ப்பு பேரணியில் வேலன் சுவாமி பங்குபற்றியிருந்தார். அதன் காரணமாக அவரைக் கைது செய்துள்ளார்கள். சட்டவிரோதக் கூட்டமொன்றை நடத்தியதாகவும், ஜனாதிபதிக்கு எதிராகக் கறுப்பு கொடி காட்டியதாகவும், பொலிஸார் ஊர்வலத்தை தடுத்த போது பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாகவும் - காயம் விளைவித்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
அமைதியான முறையில் நடத்தப்பட்ட ஒரு பேரணி, இலங்கை அரசமைப்பிலே 14 ஆவது உறுப்புரையிலே இப்படியான எதிர்ப்பு பேரணிகள் நடத்துவதற்கு முழு உரித்தும் இருக்கிறது என்பதை மன்றிலே சுட்டிக்காட்டி இருக்கின்றோம்.
இதனை ஒரு சட்டவிரோதக் கூட்டம் என்று பொலிஸார் அழைப்பதற்கு எந்தவிதச் சட்ட அடிப்படையும் கிடையாது என்பதைத் தெளிவாக நீதிமன்றத்துக்குச் சொல்லி இருக்கின்றோம்.
அது மட்டுமல்ல அமைதியான முறையில் பேரணி நடத்தப்பட்டு ஜனாதிபதிக்கு இங்கே இருக்கக்கூடிய மக்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்குரிய உரிமை இருக்கின்றது என்றும் மக்கள் சார்பாக இதனைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வேலன் சுவாமி மிகவும் அமைதியாக பொலிஸாரிடத்திலே பல தடவைகள் கேட்டிருந்தார்.
பொலிஸாருடைய குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை
ஆனால், அவர்கள் மறுத்த காரணத்தாலும் அதற்குப் பதில் சொல்லாமல் இருந்த காரணத்தாலும் பின்னர் ஜனாதிபதி போய்விட்டார் என்று பொய் சொன்ன காரணத்தாலும் கூட்டத்தில் இருந்தவர்கள் கோபமடைந்து அந்தத் தடுப்பு வேலியை அகற்றி முன்னேறினர்.
அப்போது பொலிஸார் நீர்த்தாரை அடித்து குழப்பினர். வேலன்சுவாமி எந்தவிதமான வன்முறையிலும் ஈடுபடவில்லை.
இது சம்பந்தமாக பொலிஸாருடைய குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதையும் நீதிமன்றத்துக்கு எடுத்துச்சொல்லி இருக்கிறோம்.
பொலிஸாருடைய முறைப்பாட்டையும் நாங்கள் செய்த சமர்ப்பணங்களையும் செவிமடுத்த நீதிமன்றம் வேலன் சுவாமியை ஆள் பிணையில் செல்வதற்கு அனுமதித்திருக்கின்றது.
ஜனவரி 31ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் எடுக்கப்படும்.
இதற்கு மேலதிகமாக, பொலிஸார் சில தடைகளை உபயோகித்து மக்களைத் திசைதிருப்பிய வேளையிலே தனக்கு காயம் விளைவித்ததாகவும், தன்னைத் தாக்கியதாகவும் வேலன் சுவாமி கொடுத்த வாக்குமூலத்திலே குறிப்பிட்டுள்ளார்.
அதனை நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியிருந்த நிலையில் காயங்களை ஆராய்ந்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
