கணக்கு வாக்கெடுப்புக்கு தயாராகுமாறு ஜனாதிபதி நிதியமைச்சுக்கு உத்தரவு
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உடனடியாக கணக்கு வாக்கெடுப்பை (Vote on account ) சமர்ப்பிக்க தயாராக இருக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நிதி அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகள் மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப இந்த கணக்கு வாக்கெடுப்பு இருக்க வேண்டும்.
கணக்கு வாக்கெடுப்பு
ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் இருக்காது.
எனவே தற்காலிக ஏற்பாடாக கணக்கு வாக்கெடுப்பை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக தேவையான ஏற்பாடுகளை ஜனாதிபதி செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த பணியாளர் மட்ட உடன்படிக்கையை பிரச்சினைகள் இன்றி எட்டுவதை உறுதிப்படுத்த இலக்குகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி
நிதி அமைச்சகத்தின் தகவல்களின்படி, அரசாங்கத்தின் செலவுகளை மாத்திரம் காட்டும் கணக்கு வாக்கெடுப்பு பொதுவாக மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை அதை நீடிக்க முடியும்.
இதுவரை ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரமே திறைசேரி பணம் ஒதுக்கியுள்ளதோடு தேவைப்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒதுக்கீட்டை கணக்கு வாக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கணக்கு வாக்கெடுப்பு பொதுத் துறையின் சம்பளம் மற்றும் அரசாங்க சேவைகளின் பராமரிப்பு செலவுகளை ஈடுசெய்யும் என்றும் அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |