ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்: சஜித் அணி உறுதி
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறியதாவது,
ஜனாதிபதித் தேர்தல்
"ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார். தோல்வி எனத் தெரிந்தால் அதில் போட்டியிடாமல் இருக்கும் முடிவை 2005 ஆம் ஆண்டிலேயே அவர் எடுத்துவிட்டார்.
தற்போது ஆய்வு நடத்துகின்றார். அதில் தோல்வி எனத் தெரிந்தால் போட்டியிடமாட்டார். 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவர் களமிறங்கும் முடிவில் இருக்கவில்லை.
எனினும் கொழும்பில் ஓர் ஆசனம் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைக்கும் என நாம்கூட நம்பினோம். ஆனால், ஓர் ஆசனம் கூட ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைக்கவில்லை. ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் மாத்திரமே கிடைத்தது.
எனவே ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
மொட்டுக் கட்சி வாய்ப்பு வழங்கினால்கூட அவர் வரமாட்டார். போட்டியிடப்போவதில்லை என்பதை முன்கூட்டியே அறிவித்துவிட்டால் ஜனாதிபதியின் உத்தரவுகளை சிலர் ஏற்காமல் இருக்கக்கூடும். இதன் காரணமாகவே கடைசி வரை அவர் மௌனம் காப்பார்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |