தமிழர்களின் மனங்களை ரணில் வெல்ல வேண்டும்! நாடாளுமன்றில் கூட்டமைப்பு கோரிக்கை (VIDEO)
தமிழ் மக்களின் மனங்களை வெல்லக்கூடிய அரசியல் தீர்மானங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவிக்கையில்,
"ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் எம்மைச் சந்திக்க அழைப்பு விடுத்தார். அதில் நாம் பங்குகொண்டோம். அந்தச் சந்திப்பில் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். அவருக்கு அந்த விடயங்கள் புதிய விடயங்கள் அல்ல.
தமிழ் மக்களின் மனங்களை வெல்லக்கூடிய அரசியல் தீர்மானம்
இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி எம்மிடம் உறுதியளித்தார். இந்த விடயத்தில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
எமது தமிழ் மக்களின் மனங்களை வெல்லக் கூடிய சில அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போதுள்ள அரசுக்கும் ஜனாதிபதிக்கும் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழ் மக்களின் மனங்களை வெல்லக்கூடிய அரசியல் தீர்மானங்களை ஜனாதிபதி எடுக்க வேண்டும். உலக வல்லரசு நாடுகளுடைய அதிகாரப் போட்டித்தளமாக இலங்கையின் அமைவிடம் அமைந்துள்ளது.
இதனால் உலக வல்லரசுகளின் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.