மகிந்த - ரணிலை நெருங்கும் சிக்கல்.. முக்கிய சாட்சிகளின் மர்ம மரணங்கள் - ஐநா வெளியிடும் அதிரடி அறிக்கை
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் இன்றைய அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான சிறப்பு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த அறிக்கையில், 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இலங்கையில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், சட்டச் சீர்திருத்தங்கள், நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் விசாரணைகள் ஆகியவை வேகமெடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், இவற்றின் அமலாக்கம் இன்னும் சீரற்ற நிலையிலேயே தொடர்வதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "இந்நிலைமையில், அரசாங்கம் தனது 2026 நல்லாட்சி செயல்திட்டத்தை (Governance Action Plan) வெளியிட்டுள்ளது.
எயார்பஸ் விவகாரம்..
இதில் பொதுப் பயன்பாட்டு உரிமையாளர் பதிவேட்டை நிறுவுதல், பொதுக் கொள்முதல் சட்டத்தை இயற்றுதல் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) செயற்பாடுகளை பிராந்திய அலுவலகங்கள் ஊடாக பரவலாக்குதல் உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை உள்ளடக்கிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் - எயார்பஸ் விமானக் கொள்வனவு விவகாரம் தொடர்பில் CIABOC புதிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, பல்வேறு வழக்குகளையும் பதிவு செய்துள்ளது.
அத்துடன், நிலக்கரி கொள்முதல் தொடர்பான முறைகேடுகள் குறித்த விசாரணைகளும், அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், இந்த உயர்மட்ட ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்கள் சிலர் உயிரை மாய்த்துக் கொண்டு உயிரிழந்துள்ள சம்பவங்கள், குற்றவாளிகளைக் கண்டறிவதிலும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதிலும் பெரும் பின்னடைவையும் சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளன” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.