நீதிமன்றில் இருந்து வெளியேறினார் ரணில்..
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அடுத்த வருடம் ஜனவரி 28ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் தற்போது நீதிமன்றில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சற்று முன்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) பிற்பகல் 1:30 மணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது.
ரணில் விக்ரமசிங்க, கடந்த 2023ஆம் ஆண்டு தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவை கௌரவிக்கும் வகையில் பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொள்ள பிரித்தானியாவிற்கு விஜயம் செய்ததற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) முன் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி அன்று கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், ஓகஸ்ட் 26ஆம் திகதி கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையிலேயே, வழக்கை இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |