சுவீடனில் குர்ஆன் எரிப்புக்குக் கண்டனம் தெரிவித்த முதல் உலகத்தலைவர் ரணில்! வஜிர பெருமிதம்
சுவீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு எதிராக குரல் எழுப்பிய முதலாவது உலகத் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே என வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கால்வாய் புனரமைப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்து காலி மாவட்டத்தில் கால்வாய் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன இந்த விடயத்தை கூறியுள்ளார்.
புனித குர்ஆன் பிரதி எரிப்பு
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சுவீடனில் புனித குர்ஆன் பிரதி எரிக்கப்பட்ட சம்பவம் முழு உலகிலும் வாழும் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது.
உலகத்தலைவர்கள் மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அதுகுறித்து முதலாவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரணிலின் வலியுறுத்தல்
உலகில் வேறு எந்தத் தலைவரும் இதற்கு எதிராக குரல் எழுப்பவில்லை என்பதுடன் கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் என இலங்கை ஜனாதிபதி மேற்குலக நாடுகளிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் வஜிர சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் சபையில் கலந்துரையாடப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |