தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்துவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு: வஜிர அபேவர்தன
16 இலட்சம் அரச துறை ஊழியர்களையும் 80 இலட்சம் தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (07.11.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் வெற்றியின் ஊடாக எதிர்காலத்தில் மின்சாரம், எரிவாயு மற்றும் எரிபொருளின் விலைகளை குறைத்து, மக்களுக்கு சிறந்த பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.
இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொள்கின்றேன் “பதினாறு இலட்சம் பேருக்கும் அதிகமாக உள்ள அரச பொறிமுறையை வரவு செலவுத் திட்டத்துடன் பொருத்துவதில், வங்குரோத்தான நாட்டின் எதிர்கால இலக்குகளை எவ்வாறு அடைவது என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக 2019 ஆம் ஆண்டில் நமது ஆட்சி மாற்றப்பட்ட பிறகு பொருளாதார நெருக்கடி உருவாகியது. அக்காலத்தில் வரிக் கொள்கை மாற்றப்பட்டது.
குறிப்பாக தனிநபர் வருமான வரி குறைக்கப்பட்டது. அதேபோன்று, தொடர்ந்தும் அதிகளவில் காணப்பட்ட வரித் தொகைகளை நீக்கி, வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன.
இந்த வரிச் சலுகைகள் காரணமாக இந்த நாடு வேகமாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. இறுதியாக 2022 ஆம் ஆண்டாகும்போது மத்திய வங்கி பணத்தை அச்சிட்டு சம்பளம் வழங்கும் நிலை தோன்றியது.
அந்த நிலையுடன், நாம் ஒரு விடயத்தை நினைவில் கொள்ள வேண்டும். எப்போதும் ஒரு அரசாங்கம் வீழ்ச்சி அடைவது அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போதுதான். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எப்போதும், இவ்வாறு வீழ்ச்சி அடைந்த நாட்டைப் பொறுப்பேற்று அதனை மீட்டெடுத்துள்ளார்.
உதாரணமாக 2015 ஆம் ஆண்டு பத்தாயிரம் ரூபாவால் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டாலும் கூட அது அரச ஊழியர்களின் சம்பள சுற்றறிக்கையின் பிரகாரம், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அவர்களின் வருமானத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.
நாடு வங்குரோத்து அடைந்தபோது எரிவாயு லொறிகள் மற்றும் எரிபொருள் பௌஸர்களைக் கண்டவுடன் மக்கள் கைதட்டி ஆரவாரம் அளிக்கும் நிலை தோன்றியது.
அரச அலுவலகங்களில் மின்சாரம் இன்றி அரச பொறிமுறை ஸ்தம்பித்தது. இப்போது அனைத்தும் கிடைக்கின்றன. ஆனால் விலை அதிகரித்துள்ளது. அதன் விலைகளைக் குறைக்க வேண்டியுள்ளது.
எந்தவித சந்தேகமும் கொள்ள வேண்டாம். நான் அறிந்த இந்நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இறுதியில் எரிவாயு விலையையும் குறைப்பார். மின்சார விலையையும் குறைப்பார். தற்போதுள்ள பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார். சம்பளத்தையும் அதிகரிப்பார் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |