ரணில் - அநுர கும்பலின் சூழ்ச்சி: சஜித்தின் குற்றச்சாட்டு
ஐக்கிய மக்கள் சக்தியைத் தோற்கடிக்க ரணில் - அநுர கும்பல் இரவு பகல் பாராது சூழ்ச்சி செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் முன்னெடுக்கப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இந்த நாடு மீண்டும் அபிவிருத்தியை நோக்கிய யுகத்துக்குச் செல்வதற்கும் தொழிற்சாலைகள் உருவாகி, தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மக்களின் வறுமை நீங்கி மூலைமுடுக்கு, கிராமங்கள், நகரங்கள், விருத்தியடைந்து நாடு அபிவிருத்தி அடைகின்ற வேலைத்திட்டத்துக்கும் ரணில் - அநுர கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்.
ராஜபக்சக்களுக்கு எதிராக மனு
ரணில் - அநுர கும்பல் இரவு பகல் பாராது ஐக்கிய மக்கள் சக்தியைத் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்தச் சூழ்ச்சிக்குள் நாட்டு மக்கள் சிக்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
கட்டுக்கட்டாக பைல்களைத் தூக்கிச் சென்ற ஒரு குழுவினர் திருடர்களை பிடிப்போம் என்று கூறினாலும், ஐக்கிய சட்டத்தரணிகள் சக்தி உயர்நீதிமன்றத்தை நாடி நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்சக்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து தீர்வைப் பெற்று, அவர்கள் நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகள் என வெளிக்கொணர்ந்தது.
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு பின்னர் இந்தத் தீர்வின் ஊடாக நட்ட ஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |