கல்லடி பாலம் தொடக்கம் மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை பேரணி மேற்கொள்ள தடை
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஊர்வலமாக மட்டக்களப்பு பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதாவது கல்லடி பாலம் தொடக்கம் மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை நாளை முதல் எதிர்வரும் ஆறாம் திகதி வரையிலான காலப்பகுதிகளில் பேரணி மேற்கொள்ள தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவு அடங்கிய கடிதமானது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த தடை உத்தரவில், பொலிஸாரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கோப்பிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஊர்வலமாக மட்டக்களப்பு பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதாவது கல்லடி பாலம் தொடக்கம் மட்டக்களப்பு காந்தி பூங்கா வரைக்கும் பேரணியாக 2021.02.03ஆம் திகதி தொடக்கம் 2021.02.06ஆம் திகதி வரையிலான காலப்பகுதிகளில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருக்கும் மேற்படி நடவடிக்கையினை தடுத்து நிறுத்தும் பொருட்டு தடை உத்தரவு ஒன்றினை பிறப்பிப்பதற்காக ஏதுக்கள் இருப்பதாக இம்மன்று திருப்தி படுவதினால் 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடைபடிமுறை சட்டக்கோவை பிரிவு 106(1)இன் கீழ் பொலிஸார் கோரியவாறு தடை உத்தரவை பிறப்பித்து கட்டளையிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







