ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை பிரஜைகள் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி குறித்த நான்கு இலங்கை பிரஜைகளும், அவர்களது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார்கள் என இந்திய மத்திய உள்துறை அமைச்சக தரப்புக்கள் தெரிவிப்பதாக மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை குற்றச்சாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் நளினி உள்ளிட்ட ஆறுபேரும் உயர் நீதிமன்றத்தால் அண்மையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அதில் இலங்கை தமிழர்களான முருகன் (ஸ்ரீஹரன்), ரொபர்ட் பயஸ், எஸ்.ஜெயக்குமார் மற்றும் சாந்தன் ஆகிய நால்வரையும் நாடு கடத்துமாறு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சியில் சிறப்பு முகாம்
இந்த நால்வரும் தற்போது திருச்சியில் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள், இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் சில சட்ட நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் தெரியவருகிறது.
எனினும் அவர்கள் நாடு கடத்தப்படுவதற்கான காலக்கெடு அல்லது குறிப்பிட்ட திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த விடுதலை மற்றும் நாடு கடத்தல்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
