நளினியை பார்த்து கண்ணீர்விட்டு அழுத பிரியங்கா காந்தி! வெளிப்படையாக எதனையும் கூற முடியாது: மனம் திறந்த நளினி(Video)
சிறைச்சாலை என்பது மிகப்பெரிய பல்கலைகழகம் அங்கு நான் பல விடயங்களை கற்றுக்கொண்டேன், இனி வரும் நாட்களில் கணவன் மற்றும் பிள்ளையுடன் இணைந்து வாழ்வது தொடர்பிலேயே தான் கவனம் செலுத்தி வருவதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி தெரிவித்துள்ளார்.
அத்துடன், லண்டனில் வசிக்கும் தனது பிள்ளையைச் சென்று பார்ப்பதில் கவனம் செலுத்தி வருகின்றோம். இலங்கை தூதரகத்திற்கு சென்று எனது கணவருக்கு கடவுச்சீட்டு மற்றும் விசா பெறுவது தொடர்பில் கதைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
விடுதலையான பின்னர் நடத்திய முதலாவது செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரியங்கா காந்தி தன்னை சிறையில் சந்தித்தவேளை தனது தந்தை ராஜீவ்காந்தியின் படுகொலை குறித்து கேள்விகளை எழுப்பினார் எனவும் நளினி குறிப்பிட்டார்.
எனக்கு தெரிந்த அனைத்தையும் பிரியங்காவிடம் தெரிவித்தேன் என தெரிவித்துள்ள நளினி பிரியங்கா உறுதியானவராக காணப்பட்டாரா அல்லது உணர்ச்சி வசப்பட்டவராக காணப்பட்டாரா என்ற கேள்விக்கு பிரியங்கா மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக காணப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு பல வருடங்களிற்கு பின்னரே பிரியங்கா தன்னை சந்தித்த போதிலும் தனது தந்தையின் மரணத்தினால் ஏற்பட்ட காயங்கள் ஆறாத நிலையில் பிரியங்கா காணப்பட்டார் என நளினிதெரிவித்துள்ளார். பிரியங்கா அழுதாரா என்ற கேள்விக்கு ஆம் என நளினி குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி 1991இல் கொலை செய்யப்பட்டார் 2008 இல் நளினியை பிரியங்கா வேலூர் சிறைச்சாலையில் சந்தித்தார். இந்த சந்திப்பில் பேசப்பட்ட ஏனைய விடயங்கள் குறித்து வெளிப்படையாக எதனையும் தெரிவிக்க முடியாது ஏனென்றால் அவை பிரியங்காவின் விருப்பத்துடன் தொடர்புபட்டவை எனவும் நளினி தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி குடும்பத்தை சந்திப்பதில் ஏதாவது தயக்கம் உள்ளதா என்ற கேள்விக்கு அவர்கள் விரும்பினால் நான் அவர்களை சந்திப்பேன் ஆனால் படுகொலை வழக்கு காரணமாக தயக்கம் கொண்டிருந்தேன் எனவும் நளினி தெரிவித்துள்ளார்.