கல்விக்கு வறுமை தடையல்ல..! யாழில் சாதித்த மாணவிக்கு ரஜீபன் எம்.பி வாழ்த்து
2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த புனித அந்தோனியார் கல்லூரி மாணவி தேவடாஸ் கிஷானிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது முகநூல் பக்கத்தின் மூலம் இந்த வாழ்த்தை வெளியிட்டுள்ளார்.
வறுமை தடையல்ல..
அந்த பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 27வது இடத்தையும் பெற்றுள்ளமை மிகுந்த பெருமைக்குரிய சாதனையாகும்.

வாழ்க்கைப் பயணத்தில் எதிர்நோக்கிய கடுமையான சவால்கள், குறிப்பாக தந்தையை இழந்த துயரநிலையிலும், மன உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் கல்வியில் தொடர்ந்து முன்னேறியுள்ளமை, சமூகத்திற்கே ஒரு ஊக்கமூட்டும் முன்னுதாரணமாக திகழ்கிறது.
இத்தகைய மாணவர்களின் சாதனைகள், வடக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்கும், எதிர்கால தலைமுறையின் நம்பிக்கைக்கும் வலுசேர்க்கின்றன என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
அவரது உயர்கல்விப் பயணம் மேலும் சிறக்கவும், எதிர்காலத்தில் நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனளிக்கும் சிறந்த நிபுணராக உருவெடுக்கவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.