பகிரங்க மன்னிப்பு கோரிய கஸ்ஸப்ப! பின்னணியில் காய் நகர்த்தும் ராஜபக்சர்கள்..
ஆரம்பத்தில் நீதிமன்றத்தையும், நீதிபதியையும் விமர்சித்திருந்த கஸ்ஸப்ப தேரர், இறுதியில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இவர் போன்றவர்களை ராஜபக்சர்களே பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என ஜனபலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கண்ணங்கர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அநுராதபுரத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் அனைத்து தரப்பினரும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஒரு தரப்பினரை மாத்திரம் கைது செய்வது சரியான அணுகுமுறையாக இருக்காது.
பின்னணியில் ராஜபக்சர்கள்
அந்தச் சம்பவத்தில் பல தரப்பினருக்கும் தொடர்பு இருந்திருந்தால், அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
பலாங்கொட கஸ்ஸப தேரர் முன்னதாக நீதிமன்றத்திற்கும் நீதிபதிகளுக்கும் சவால் விடுக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதிக்காத வகையில் நடந்து கொண்டார். ஆனால், பின்னர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானபோது மன்னிப்புக் கோரும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

எனவே இந்த நாடகம் முடிவுக்கு வந்திருப்பது ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் பின்னணியில் ராஜபக்ச தரப்பினரின் அரசியல் தலையீடு இருப்பதாக நாம் கருதுகின்றோம். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் சிலர் ராஜபக்ச தரப்பினரால் வழிநடத்தப்படுபவர்களாவர்.
பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் இனவாத மற்றும் மதவாதச் செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இனவாதத்தையும், மதவாதத்தையும் மீண்டும் தூண்டுவதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் மக்கள் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஊழல் அரசியல் சக்திகளின் ஆதரவைப் பெறும் பிக்குகள் மற்றும் இனவாதக் குழுக்களுக்கு இடமளிக்கக் கூடாது. நாட்டில் அமைதியான சூழலைப் பேணுவதற்கும் அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வீட்டுக்குச் சென்ற திருமாவளவன்! தமிழக அரசியலில் புதிய சர்ச்சை