படுகொலை செய்யப்பட்ட 10,000 முஸ்லிம்கள்.. உலக வரலாற்றில் முதல்முறையாக ஐநாவின் சிறப்புத் தீர்ப்பு
2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் சுமார் 10,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த படுகொலைக்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், சிறுபான்மையினரின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கிலேயே இந்த இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச நீதிமன்றம் இன்று (19) வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
நெதர்லாந்தின் உள்ள நீதிமன்றத்தில் 15 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பை வாசித்த நீதிமன்றத் தலைவர் யூஜி இவாசாவா, "மியன்மார் பாதுகாப்புப் படையினர் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா பொதுமக்களைக் கொன்று குவித்துள்ளனர்.
10,000 பேர் படுகொலை
பெண்களுக்கு எதிராகப் பரவலான பாலியல் வன்முறைகளையும், குழந்தைகளுக்கு எதிராகக் கொடூரத் தாக்குதல்களையும் நடத்தியதோடு, உயிர் தப்பி ஓடிய மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்" எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், வடக்கு ரக்கைன் (Rakhine) மாநிலத்தில் ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக 'தூய்மைப்படுத்தும் நடவடிக்கை' என்ற பெயரில் மியன்மார் இராணுவம் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது.
இதில் கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு, பல இலட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடான பங்களாதேஷிற்கு அகதிகளாகத் தப்பிச் சென்றனர்.
இதனை ஒரு சட்டபூர்வமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என மியன்மார் நியாயப்படுத்தி வந்த நிலையில், 1948ஆம் ஆண்டின் இனப்படுகொலை தடுப்பு உடன்படிக்கையை மியன்மார் மீறியுள்ளதாகக் கூறி, முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஆப்பிரிக்க நாடான காம்பியா (Gambia) 2019ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
முதல் முறையான தீர்ப்பு
முன்னதாக 2007இல் 1995 செர்ப்ரெனிகா படுகொலையைத் தடுக்கத் தவறியதாக செர்பியா மீது தீர்ப்பளிக்கப்பட்டிருந்த போதிலும், சர்வதேச நீதிமன்ற வரலாற்றில் ஒரு நாடு இனப்படுகொலையில் ஈடுபட்டதாகத் தீர்ப்பளிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

தற்போது பங்களாதேஷின் காக்ஸ் பஜார் (Cox’s Bazar) முகாம்களில் சுமார் 12 இலட்சம் ரோஹிங்கியா அகதிகள் நோய்கள், நிலச்சரிவு மற்றும் அடிப்படை வசதிகளற்ற மிக மோசமான சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு முழுக் குடியுரிமை வழங்கி, தாயகம் திரும்புவதற்கான பாதுகாப்பான சூழலையும் இழப்பீடுகளையும் மியன்மார் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு சட்டபூர்வமாகக் கட்டுப்படுத்தக்கூடியது என்றாலும், இதனை நடைமுறைப்படுத்த ஐ.நா. பாதுகாப்புச் சபையிடம் முறைப்பாடு அளிப்பதை தவிர நீதிமன்றத்திற்கு நேரடி அதிகாரங்கள் இல்லை.
மேலும், காசா போர் தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிராகத் தென்னாப்பிரிக்கா தொடர்ந்துள்ள வழக்கும், உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிரான வழக்கும் இதே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மியன்மார் மீதான இந்தத் தீர்ப்பு உலகளாவிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனச் சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.