ஜனாதிபதியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திய ராஜபக்ச குடும்பம் – திலித் ஜயவீர குற்றச்சாட்டு
ராஜபக்ச குடும்பமே தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அழித்தது என இலங்கையின் முன்னணி வர்த்தகர் திலித் ஜயவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் திலித் ஜயவீர இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
குடும்பத்தினர் ஜனாதிபதி மீது கடுமையான அழுத்தம்
நாமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குடும்பத்தினர் ஜனாதிபதி மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தனர்.
ஜனாதிபதி தனது நெருங்கிய நண்பர் என்ற போதிலும் குடும்பத்தினர் அவரை சுயாதீனமாக இயங்கவிடவில்லை.ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றியீட்டுவதற்கு முக்கிய பங்காற்றிய தாம் மிகுந்த மன வேதனையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய மக்களின் ஆணையை புறந்தள்ளியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.சகோதர பாசத்தினாலும், நன்றிகடன் காரணமாகவும் கோட்டாபயவினால் ஆக்கபூர்வமான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை.
ராஜபக்ச குடும்பத்தினரிடமிருந்து இதுநாள் வரையில் தாம் எந்தவொரு தனிப்பட்ட நலனையும் பெற்றுக்கொண்டதில்லை எனவும் அவ்வாறு ஏதேனும் பெற்றுக் கொண்டிருந்தால் ராஜபக்சக்கள் அதனை பகிரங்கமாக கூற முடியும்.
மிகுந்த கவலையில் ஜனாதிபதி
கோவிட் பெருந்தொற்று ஆரம்ப காலத்தில் ஹோட்டல்களின் மூலமாகவோ அல்லது அன்டிஜன் பரிசோதனை கருவிகள் மூலமாகவோ அநீதியான முறையில் இலாபமீட்டவில்லை. நாட்டை நினைத்து தாம் மிகுந்த கவலையடைவதாகத் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய நெருங்கிய நண்பர் என்ற போதிலும் ஆலோசனைகளை ஏற்கவில்லை எனவும், பீ.பி.ஜயசுந்தரவை நியமித்த போது அதனை தாம் கடுமையாக எதிர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக சமூக ஊடகங்களில் செய்யப்படும் பிரச்சாரங்களின் பின்னணியில் நாமல் ராஜபக்ச மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோரே இருக்கின்றனர்.
கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தவர்கள்
ராஜபக்ச குடும்பம் ஆரம்பத்தில் கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க விரும்பவில்லை எனவும் தாம் உள்ளிட்ட நண்பர்களே கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக உருவாக்கியதாகவும், ராஜபக்ச குடும்பத்தினர் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதனால் ஜனாதிபதியின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டது.
கோட்டாபயவை வெளியேற்றுவதற்கு மக்களை விடவும் ராஜபக்ச குடும்பம் தீவிரம் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவினாலும் நாட்டில் தற்பொழுது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.