ராஜபக்சக்கள் மறைத்து வைத்துள்ள கோடிக்கணக்கான டொலர்கள்! அநுர தரப்பை சீண்டிப் பார்க்கும் நாமல்
உகண்டாவில் ராஜபக்சக்கள் மறைத்து வைத்துள்ளதாக கூறப்படும் கோடிக்கணக்கான டொலர்களை மீட்பதற்காக அரசாங்கத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்க தமது கட்சி தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உகண்டாவில் நாங்கள் பணத்தை மறைத்து வைத்துள்ளோம் என்று யாரேனும் கூறினால், அந்த பணத்தை நாட்டுக்கு கொண்டு வந்து வெளிநாடுகளின் கடனை அடைத்து விடலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாமலின் சவால்
இலங்கையில் இருந்து சீஷெல்ஸ் மற்றும் உகண்டாவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் பணத்தை இந்த அரசாங்கத்தினால் மீளக் கொண்டுவர முடியும் என தாம் நம்புவதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்னும் சிறிது நாட்களின் பின்னர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஏனைய ராஜபக்சர்கள் நாட்டில் இருந்து கொள்ளையடித்து பதுக்கி வைத்திருக்கும் பணத்தை வெளிக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம் என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வசந்த சமரசிங்க நேற்றையதினம் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அத்துடன், நீதிமன்றம் இது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், சில நாட்கள் பொறுத்திருக்குமாறும் அதன் பின்னர் மறைக்கப்பட்ட பணம் தொடர்பில் வெளிக்கொண்டு வரப்படும் எனவும் வசந்த சமரசிங்க குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், இதற்கு முன்னரான நாட்களில் ராஜபக்சக்கள் உகண்டாவில் மறைத்து வைத்திருப்பதாக கூறப்படும் பணம் தொடர்பில் புதிய அரசாங்கம் உண்மையை நிரூபிக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் சவால் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        