இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அப்பகுதிகளில் மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும், சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வடமத்திய, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.