பாலஸ்தீன வீரரின் இனவாத சைகை : இந்திய கால்பந்து சம்மேளனம் முறைப்பாடு
இந்திய அணியின் தலைவருக்கு எதிராக பாலஸ்தீன கால்பந்து வீரர் ஒருவர் இனவாத சைகையை வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இந்திய கால்பந்து சம்மேளனம், ஆசிய கால்பந்து சம்மேளனத்திடம் உத்தியோகபூர்வ முறைப்பாட்டைச் செய்துள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான ஆசிய சம்மேளன 17 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ணத் தகுதிகாண் போட்டியின் போது, மலேசியாவின் கோலாலம்பூரில் இந்திய மற்றும் பாலஸ்தீன அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அசௌகரியத்தின் காரணமாக
இந்தப் போட்டியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
போட்டியின் போது, இந்திய அணியின் தலைவர் டல்லால்முவோன் கங்தேவுக்கு அருகில் நடந்து சென்ற பாலஸ்தீன மத்தியகள வீரர் தாஹா சுவைதான், கையால் விசிறுவது போன்ற சைகையை வெளிப்படுத்திய காட்சிகள் காணொளியில் பதிவாகியிருந்தன.

குறித்த சைகையை இனவாதச் செயலாகக் கருதும் இந்திய கால்பந்து சம்மேளனம், சம்பவம் தொடர்பான காணொளிகளை ஆய்வு செய்து, உரிய விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இனவாதம் மற்றும் பாகுபாடான நடத்தைகளுக்கு கால்பந்தாட்டத்தில் இடமில்லை எனத் தெரிவித்துள்ள இந்திய கால்பந்தாட்ட சம்மேளனம், இத்தகைய செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இனவாதக் குற்றச்சாட்டை மறுத்துள்ள 15 வயதுடைய தாஹா சுவைதான், மலேசியாவின் அதிக ஈரப்பதமான காலநிலையால் ஏற்பட்ட அசௌகரியத்தின் காரணமாகவே அந்தச் சைகையை வெளிப்படுத்தியதாக விளக்கமளித்துள்ளார்.
உறுதியாக நிராகரிப்பதாக
ஜேர்மனியின் FC Union Berlin கழகத்தின் 17 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடும் அவர், சம்பவம் தொடர்பான சமூக ஊடக விமர்சனங்களால் அதிர்ச்சியடைந்ததாகவும், இந்திய அணித் தலைவரைப் புண்படுத்தும் நோக்கம் தமக்கு இருக்கவில்லை என்பதை அவரிடம் நேரடியாகத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், தமக்கும் இந்திய அணித் தலைவருக்கும்; இடையில் எந்தவிதமான வாக்குவாதமோ மோதலோ இடம்பெறவில்லை என்றும், இரு அணியினரும் ஒரே விருந்தகத்தில்; தங்கியுள்ளதுடன் நட்புறவுடனும் பரஸ்பர மரியாதையுடனும் பழகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து வகையான இனவாதத்தையும் தாம் உறுதியாக நிராகரிப்பதாகவும், தமது இயல்பான சைகை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டமை கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை மைனா நந்தினி... அவரே வெளியிட்ட கியூட் வீடியோ Cineulagam