பிரித்தானிய ராணிக்கு முதலாவதாக அஞ்சலி செலுத்திய இலங்கை தமிழ் பெண்
பிரித்தானிய மகாராணியின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை தமிழ் பெண் ஒருவர் ராணியின் உடலுக்கு முதலாவதாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.
56 வயதான வனேசா நந்தகுமாரன் என்ற தமிழ் பெண்ணுக்கே இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சுமார் 50 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அவர் அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைகளை தாண்டி அஞ்சலி செலுத்திய தமிழ் பெண்
தனது 96 வது வயதில் காலமான பிரித்தானிய மகாராணியின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டடது. இதன் போது இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான முதல் சந்தர்ப்பம் வனேசா நந்தகுமாரன் என்ற இலங்கை தமிழ் பெண்ணுக்கு கிடைத்துள்ளது.
இது குறித்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், " எனக்கு இப்படியான சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.
மகாராணியாருக்கு முதலில் அஞ்சலி செலுத்த கிடைத்த சந்தர்ப்பம் தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன். வெயில், மழை என்ற தடைகளை பாராது நான் மகாராணிக்கு அஞ்சலி செலுத்த காத்திருந்தேன்", என தெரிவித்துள்ளார்.
வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோவைச் சேர்ந்த வனேசா, ஆல்பர்ட் கரையில் 50 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று முதலாவதாக ராணிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் .
அவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக இரண்டு நாட்கள் வரையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் உள்ளிட்ட குழுவினர் லண்டன் பயணம்
இதேவேளை, பிரித்தானிய மகாராணியின் இறுதி ஊர்வலம் நாளை மறுதினம் (19ம் திகதி) இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் லண்டன் சென்றுள்ளனர்.
மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை தொடர்ந்து வேல்ஸ் முன்னாள் இளவரசர் சார்ள்ஸ் பிரித்தானிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.