கௌரவ ஆடையை அணிவது யார்? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரித்தானிய மகாராணி
இளவரசர் பிலிபின் உடல் நாளை மறுதினம் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், கௌரவ ஆடையை யார்? அணிவது என்ற சர்ச்சைகளுக்கு பிரித்தானிய மகாராணி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் தனது 99வது வயதில் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். அவரின் உடல் நாளை மறுதினம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், ராணியின் குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்கின்போது, குடும்பத்தில் உள்ள ஒருவர் இராணுவ உடை அணிந்து செல்வர். இது பராம்பரிய நிகழ்வாக இருந்து வருகிறது.
இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கின்போது ஹாரி அல்லது 61 வயதான ஆண்ட்ரூ ஆகியோரில் ஒருவர்தான் இராணுவ ஆடையை அணிய வேண்டும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஏனெனில், ஹாரி ஆப்கானிஸ்தான் போரின்போது பிரித்தானிய படையுடன் இணைந்து செயற்பட்டிருந்தார். அதேபோல் ஆண்ட்ரூ 1982ம் ஆண்டு போக்லாந்து தீவு பிரச்சினையின்போது பணிபுரிந்தார்.
எனினும், ஹாரி, தனக்கு அரச குடும்பத்தின் மரியாதை ஏதும் வேண்டாம் என அவரது மனைவியுடன் இங்கிலாந்தில் இருந்து வெளியேறிவிட்டார். ஆண்ட்ரூ அவர்களும் அரசு குடும்ப பொது வாழ்க்கையில் இருந்து விலகிக்கொண்டார்.
இதனால் இருவரில் ஒருவர்தான் இந்த மரியாதையை ஏற்பதற்கு உரியவர்கள் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த விடயம் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், அரச குடும்பத்தின் அனைவரும் மௌன அஞ்சலிக்கான அந்த உடையை அணிவார்கள் என்று ராணி முடிவு எடுத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.