வாக்னர் படை தலைவரின் இறுதிசடங்கு: புடின் வெளியிட்ட அறிவிப்பு
விமான விபத்தில் உயிரிழந்த ரஷ்ய தனியாா் இராணுவமான வாக்னா் படையின் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷினின் இறுதிச் சடங்கில் அதிபா் விளாதிமீா் புதின் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரஷ்ய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில்,
வாக்னா் படைத் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷினின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி புடின் கலந்துகொள்ளும் திட்டமில்லை.
புடினின் துணை இராணுவப் படை
மேலும், ப்ரிகோஷின் மற்றும் அவருடன் விபத்தில் உயிழந்தவா்களின் உடல்கள் எங்கு, எப்போது அடக்கம் செய்யப்படும் என்று இப்போது கூற முடியாது என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் தனியாா் ராணுவப் படையான வாக்னா் குழு, அந்த நாட்டுக்காக ஆப்பிரிக்கா, சிரியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் போரிட்டு வந்தது.
‘ஜனாதிபதி புடினின் துணை இராணுவப் படை’ என்று வா்ணிக்கப்பட்ட அது, தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் போரில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ரஷ்ய இராணுவத்துக்காக கைப்பற்றிக் கொடுத்தது.
எனினும், இந்தப் போரின்போது இராணுவ தலைமைக்கும், வாக்னா் குழு தலைவா் ப்ரிகோஷினுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், இராணுவ தலைமைக்கு எதிராக வாக்னா் படை கடந்த ஜூன் 23-ஆம் தேதி ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டது. இது, ஜனாதிபதி விளாதிமீா் புடினின் தலைமைக்கு மிகப் பெரிய சவாலாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது நாளே ஆயுதக் கிளா்ச்சியைக் கைவிடுவதாக ப்ரிகோஷின் அறிவித்தாா். விளாதிமீா் புடின், யெவ்கெனி ப்ரிகோஷின் ஆகிய இருவருக்குமே நெருக்கமான பெலாரஸ் நாட்டு ஜனாதிபதி அலெக்ஸாண்டா் லுகஷென்கோ முன்னிலையில் சமாதானப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
ப்ரிகோஷினுக்கு பொதுமன்னிப்பு
இதில், ப்ரிகோஷினுக்கு பொதுமன்னிப்பு வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், வாக்னா் குழு ஆயுதக் கிளா்ச்சி நடத்தி சரியாக 2 மாதங்கள் நிறைவடைந்த கடந்த (23.08.2023) ஆம் திகதி மாஸ்கோவிலிருந்து யெவ்கெனி ப்ரிகோஷின் உள்ளிட்ட 10 வாக்னா் குழுவினருடன் புறப்பட்ட தனியாா் விமானம் விழுந்து நொறுங்கி, அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தனா்.
இந்த விபத்துக்கு ரஷ்ய அரசுதான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படும் நிலையில், ப்ரிகோஷினின் இறுதிச் சடங்கில் புதின் பங்கேற்கப்போவதில்லை என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



