ட்ரம்ப் வருகைக்குப் பின் பெய்ஜிங் செல்லும் புட்டின்: உலக அரசியலில் சீனாவின் இராஜதந்திர பலப்பரீட்சை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சீனப் பயணம் நிறைவடைந்த அடுத்த நாளே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று நேற்று மாலை பெய்ஜிங் சென்றடைந்த புட்டின், இரு நாடுகளுக்கும் இடையிலான ‘நல்லுறவு மற்றும் நட்பு கூட்டுறவு ஒப்பந்தத்தின்’ 25ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளார்.
கடந்த வாரம் சீனா வந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினார்.
தாய்வான் விவகாரம்
ஆனால், தாய்வான் விவகாரம் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் போர் உள்ளிட்ட முக்கிய சர்வதேசப் பிரச்சினைகளில் இரு நாடுகளுக்கும் இடையே பெரிய அளவில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.
அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில் தேக்கம் ஏற்பட்டுள்ள இந்தச் சூழல் ரஷ்யாவிற்கு சாதகமாக அமைந்துள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு வரும் ரஷ்யாவும் சீனாவும் தங்களின் மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் பலப்படுத்திக் கொள்ள புட்டினின் இந்த விஜயம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அல் ஜசீரா ஊடகத்திற்குப் பேட்டியளித்த பாதுகாப்புத் துறை ஆய்வாளர் மரினா மிரோன், "இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் இராணுவத் தொழில்நுட்பப் பகிர்வு ஆகியவை மேலும் ஆழமடையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை
உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யா பொருளாதார ரீதியாகச் சீனாவைச் சார்ந்திருக்கும் நிலை அதிகரித்துள்ளதால், இந்த சந்திப்பு ஷி ஜின்பிங்கை விட புட்டினுக்கே மிக முக்கியமானது என்றும், சீனாவிடம் இருந்து கூடுதல் இராணுவ மற்றும் தொழில்நுட்ப உதவிகளை ரஷ்யா எதிர்பார்க்கலாம் என்றும் மற்றுமொரு ஆய்வாளர் டிமோதி ஆஷ் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், உலக அரங்கில் ஒரு "நடுநிலையான வல்லரசாக" தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சீனா முயற்சிக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி என இரு துருவங்களாகச் செயல்படும் உலகத் தலைவர்களை அடுத்தடுத்த நாட்களில் தனது நாட்டுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம், சர்வதேச அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய சக்தியாகச் சீனா உருவெடுத்துள்ளது என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.