குட்டரெஸ்- புட்டின் பேச்சில் முன்னேற்றம்! இரும்பு ஆலையில் சிக்குண்டுள்ள மக்களுக்கு விடிவு!(Video)
ரஷ்யாவினால் முற்றுகையிடப்பட்ட மரியுபோலில் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதில் ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஈடுபாட்டிற்கு புடின் நிர்வாகம் கொள்கையளவில் இணக்கம் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை இதனை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் என்டோனியோ குட்டெரஸ், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் நடத்திய சந்திப்பின்போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இது குறித்து மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துடன் தொடர்ந்து விவாதங்களை நடத்தும் என்று ஐக்கிய நாடுகளின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியுள்ளார்;.
இதேவேளை உக்ரைனுடன் நடத்தப்படும் மெய்நிகர் பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புவதாக ரஷ்ய ஜனாதிபதி, குட்டரெஸிடம் தெரிவித்துள்ளார்..
எனினும், 2014ல் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியா மற்றும் செவாஸ்டோபோல் மற்றும் எட்டு ஆண்டுகளாக உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் போராடி வரும் டான்பாஸ் ஆகிய பிராந்திய பிரச்சனைகளில் முடிவு எடுக்காமல் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தில் கையெழுத்திட முடியாது என்று புடின் கூறியுள்ளார்