அதிக விலைக்கு நிலக்கரி கொள்வனவு: சந்திம வீரக்கொடி எம்.பி. முறைப்பாடு
சந்தை நிலவரத்தைக் காட்டிலும் அதிக விலைக்கு நிலக்கரி கொள்வனவு செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் நுரைச்சோலை அனல் மின் நிலையத்துக்காக அண்மையில் இலங்கை நிலக்கரி நிறுவனம் பத்து கப்பல்களில் நிலக்கரி கொள்வனவு செய்திருந்தது.
இதன்போது ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரி 230-240 டொலர் அளவில் கொடுப்பனவு செலுத்தப்பட்டு கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்தது.
கோரிக்கை
எனினும் தற்போதைக்கு நிலக்கரி விலை அதனை விடவும் வெகுவாகக் குறைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, புதிய டெண்டர் ஒன்றைக் கோருவதன் ஊடாக ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரி 200 டொலர்கள் அளவிலான விலைக்குக் கொள்வனவு செய்ய முடியும் என்று ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.
எனவே, பழைய டெண்டர் விலைக்குக் கொள்வனவு செய்வதன் ஊடாக ஆயிரக்கணக்கான மில்லியன் டொலர்கள் இழப்பை அரசாங்கம் சந்திக்க நேரிடும் என்றும், அதனைத் தவிர்த்துக் கொள்வதற்காக உடனடியாகப் புதிய டெண்டர் ஒன்றைக் கோருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.