இந்திய - இலங்கை அரசாங்கங்களின் திட்டமிடலே சாந்தனின் இறுதிக்கிரியை இழுபறிக்கு காரணம்: போராளிகள் நலன்புரிச் சங்கம் குற்றச்சாட்டு
சாந்தனின் உடலத்தை விமான நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியாத இழுபறி நிலையானது இந்திய -இலங்கை அரசாங்கங்களின் திட்டமிட்ட ஒரு நடவடிக்கை என போராளிகள் நலன்புரிச் சங்க தலைவரும், முன்னாள் அரசியல் கைதியுமான செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் நேற்று (01.03.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது இந்திய அரசால் சட்டப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட சாந்தன் அண்ணா அவர்களுக்கு எங்களது இறுதி வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு, அவரது உடலத்தை விமான நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியாத இழுபறி நிலை இருந்தது.
அஞ்சலி நிகழ்வு
இது கூட இந்திய -இலங்கை அரசாங்கங்களின் திட்டமிட்ட ஒரு நடவடிக்கை. அதேவேளை, அவரது உடல் வவுனியா வருமாக இருந்தால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படும்.
அத்துடன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்ந்தும் போராளிகள் நலன்புரிசங்கத்திற்கு எதிராக அல்லது போராளிகளுக்கு எதிராக செயற்படுவதாக நாங்கள் உணர்கிறோம். இது இலங்கை அரசாங்கத்தின் தோல்வியாக கருதுகின்றோம்.
மேலும், ஜேவிபியினர் கூட கிளர்ச்சிகளை செய்து அவர்கள் சிறை சென்று, தற்போது பாராளுமன்றம் சென்றுள்ளதுடன், ஜனாதிபதியாக வருவதற்கு கூட முயற்சிக்கின்றார்கள்.
எனவே ஜனநாயக ரீதியாக அரசியல் செய்யவும் எமது மக்களது பிரச்சனைகளை பேசுவதற்கும், பொது பிரச்சனைகளில் பங்காற்றுவதற்கும் எமக்கு அனுமதி வேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |