புதுக்குடியிருப்பு புடவை கடை உரிமையாளர்கள் 22 சபை உறுப்பினர்களிடமும் விடுத்துள்ள கோரிக்கை!
புதுக்குடியிருப்பு பொதுசந்தை வளாகத்திற்குள் புடவைகடை வணிகம் நடத்திவரும் உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவினை பிரதேசபை ஊடாக நிவர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர்,மற்றும் சபையின் உறுப்பினர்கள் 22 பேருக்கும் மனுவினை கையளித்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பொது சந்தையினுள் உலக வங்கியின் நிதியில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 10 கடடைகளை கொண்ட கடைத்தொகுதி கடந்த 21.03.2025 அன்று வடமாகாண ஆளுனரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த 10 புடவைகடை உரிமையாளர்கள் கடந்த காலத்தில் பிரதேச சபைக்கு நிலவாடகையினை வழங்கி தகர கொட்டில்களில் வியாபாரம் செய்து வந்துள்ளார்கள்.
நிலவாடகை
இந்த நிலையில் இந்த புதிய கடைகள் கட்டுவதற்கு முன்பாக 10 கடை உரிமையாளர்களுடனும் பிரதேச சபை அதிகாரிகள் கூட்டம் போட்டு சந்திப்பினை செய்துள்ளார்கள்.
இதன்போது முற்பணம் இல்லாமல் கடை வாடகைக்கு தரப்படும் என்றும் புதிய கடைக்கு வாடகையாக 3000 ரூபா கட்ட வேண்டும் என்றும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய கடைத்தொகுதி கட்டி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆளுனரால் திறந்துவைக்கப்பட்ட பின்னர் கடைக்கான மாத வாடகை 5000 ரூபா என தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு இந்த 5000 ரூபா வாடகையினை செலுத்த முடியாத நிலையில் புதுக்குடியிருப்பு சந்தையின் புடவைக்கடை வியாபாரிகள் காணப்படுகின்றார்கள்.
புதிய கடைத்தொகுதிகள்
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடைபாதை வியாபாரங்கள் அதிகரித்துள்ளமையினால் சந்தை வியாபாரிகளின் வியாபாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பிரதேச சபையினால் அறிவிக்கப்பட்ட 5000 ரூபா வாடகையினை 3000 ரூபாவாக குறைத்து மாற்றம் செய்து தருமாறு பிரதேச சபை செயலாளர்,தவிசாளர்,சபையின் உறுப்பினர்கள் அனைவரிடமும் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்கள்.
இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசு கட்சியின் வே.கரிகாலன் கடந்த மாதம் சபையினை பெறுப்பெடுத்துள்ளார்.அவர் கடையின் உரிமையாளர்களுக்கு காலக்கெடு ஒன்றினை விடுத்துள்ளார்.
இந்த புதிய கடைத்தொகுதிகள் விலைமதிப்பீட்டு திணைக்களத்தினால் நிர்ணயிக்கப்பட்ட மாத வாடகையே 5000 ரூபா என்றும் அதன் பிரகாரமே புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.






