புதுக்குடியிருப்பில் அதிகரிக்கும் மணற்கொள்ளை.. ரவிகரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டினார்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (15.09.2026) இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரால் வெளிப்படுத்தப்பட்டது.
பாதுகாப்பற்ற நிலை..
இதன்போது, கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், ”பொலிஸாரால் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாதெனில் எமது இளைஞர், யுவதிகளிடம் ஆயுங்களைக் கையளித்தால் அவர்கள் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் இருந்திருக்கவில்லை, நடுநிசியில் கூட பெண்கள் உலவக்கூடிய நிலையிலிருந்தது, தற்போது அத்தகைய நிலை இல்லை" என்றார்.
இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் கருத்துத் தெரிவிக்கையில், "சட்டவிரோத மணல் அகழ்வென்பது முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாகவுள்ளது.
விசுவமடு நெத்தலியாறு தொடக்கம் மன்னாகண்டல் கெருடமடுவரைக்கும் சட்டவிரோத மணல் அகழ்வு மிக அதிகளவில் இடம்பெற்று வருகின்றது.
அத்தகைய சில சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளை பொலிசார் கைதுசெய்தாலும், அதையும் தாண்டி அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன” என குறிப்பிட்டார்.