யாழ் நகரின் மத்தியில் உள்ள பொதுகுடிநீர்க் குழாய் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
யாழ் நகரின் மத்தியில் உள்ள பொதுமக்கள் நித்தம் பயன்படுத்தி வரும் ஒரு குடிநீர் குழாயின் மோசமான நிலை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
பல துறைசார்ந்த அதிகாரிகள் மீது தங்கள் குற்றச்சாட்டுக்களை அவர்கள் சுமத்துவதும் இங்கே கவனிக்கத்தக்கது.
பொதுமக்கள் கூட இந்த குடிநீர் குழாயின் சுத்தம் தொடர்பில் அக்கறை காட்டாதது கவலைக்குரிய விடயமாகும்.
குடிநீர்க் குழாயும் அதனை சூழவுள்ள சூழலும் சுத்தமாக பேணப்படுவதே ஆரோக்கியமான சுகாதார பழக்கவழக்கமாகும்.
குடிநீர்க் குழாய்
யாழ் நகரின் மத்தியில் ஆடை வியாபார நிலையங்கள் தொடர்ச்சியாக உள்ள இடத்தில் வீதிக்கு அண்மையாக இந்த குடிநீர்க் குழாய் அமைந்துள்ளது.
குழாயின் சகல பகுதிகளிலும் அழுக்கடைந்த மற்றும் பச்சை நிறத்தில் பாசி படிந்திருப்பதை அவதானிக்கலாம்.
அருகிலுள்ள வியாபார நிலையங்களில் உள்ளவர்கள் தங்கள் தேவைக்குரிய நீரினை இந்த குழாய் மூலம் பெற்றுக் கொள்வதை அவதானிக்க முடிகின்றது.
பொதுமக்களில் பலரும் இந்த குழாய் நீரை பயன்படுத்துவதையும் அவதானிக்கலாம்.
ஆயினும் நீரை பெற்றுக்கொள்ள பயன்படுத்தும் இந்த குழாயினையும் அதன் கட்டமைப்பினையும் சுத்தமாக பேணுவதில் யாரும் கவனமெடுத்திருப்பதாக அந்த சூழலின் அவதானிப்புகள் எவையும் சுட்டிக்காட்டுவதாக இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
துறைசார் அதிகாரிகள்
நகரின் தூய்மை தொடர்பில் கவனமெடுக்க வேண்டிய துறைசார் அதிகாரிகளின் கவனத்துக்கு ஏன் இந்த குடிநீர்க் குழாயின் நிலை கொண்டு வரப்படவில்லை?
இந்த குடிநீர்க் குழாயின் தூய்மையற்ற பாசி படிந்த நிலையினை ஏன் அவர்கள் கவனிக்கத் தவறியுள்ளார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது.
யாழ் நகரின் மத்தியில் உள்ள இந்த குடிநீர்க் குழாயின் நிலைமையை ஆரோக்கியமான சூழலாக யாழ் மாநகர சுகாதார துறையினர் கருதுகின்றனரா?
குடிநீர்க் குழாயில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றி பாசியினையும் அகற்றி தூய்மையாக்கிக்கொள்ள முடிவதோடு அதனை நிறப்பூச்சிட்டு அழகிய தோற்றத்தை கொண்டதாக பேண முடியும் என சமூக ஆர்வலர்கள் இது தொடர்பில் தங்கள் சுட்டிக்காட்டல்களை மேற்கொண்டிருந்தனர்.
துறைசார் அதிகாரிகள் தங்கள் பொறுப்புக்களை சரிவர செய்து கொள்ளும் போது இவ்வாறான நிலை தோன்றாது எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
யாழ் வர்த்தக சங்கம்
யாழ் நகரின் மத்தியில் அமைந்துள்ள அரச பேரூந்து தரிப்பிடத்திற்கு அண்மையில் இங்கே சுட்டிக்காட்டும் குடிநீர்க் குழாய் இருக்கின்றது.
இது யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து ஸ்டான்லி வீதிக்கு செல்லும் ஒரு பாதையையும் தன்னருகே கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் யாழ் வர்த்தக நிலையங்கள் சூழ்ந்துள்ள ஒரு இடத்தில் அதிகளவில் வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோரும் வர்த்தக நிலையங்களுக்கு வந்து செல்லும் நுகர்வோரும் பயன்படுத்தி வரக்கூடிய இந்த குடிநீர்க் குழாயின் தூய்மை மற்றும் அழகுபடுத்தலில் யாழ் வர்த்தக சங்கம் ஏன் பாராமுகமாக செயற்பட்டு வருகின்றது என்ற கேள்வியும் எழக்கூடியதே!
இவை தொடர்பில் சுட்டிக்காட்டல்களை மேற்கொண்டு சீர் செய்ய வேண்டிய பொறுப்பு வர்த்தக சங்கத்திற்கும் இருக்க வேண்டும் என சமூகவியல் ஆய்வாளர் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
அழகியல் சிந்தனை
யாழ் மக்களின் அழகியல் சிந்தனை மரத்துப் போய் விட்டதோ என எண்ணத் தோன்றுவதாக நல்லூர் வாழ் வயோதிபர் ஒருவர் இது தொடர்பில் குறிப்பிடுகின்றார்.
தம்மைச் சூழவுள்ள இடங்களில் உள்ள பொருத்தப்பாடான மாற்றங்களை செய்வதன் மூலம் அவற்றை மனங்கவர்ந்த இடங்களாக பேண முடியும் என்பது அவரது எண்ணக்கருவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ் நகரின் மத்தியில் இப்படி ஒரு குடிநீர்க் குழாய் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். போதான வைத்தியசாலை அருகில் உள்ள போதும் அதிகளவான மக்கள் வந்து செல்லக்கூடிய இடமாக இருப்பதாலும் இதன் அழகு மற்றும் தூய்மைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆயினும் அது தொடர்பில் யாரொருவரும் கவலை கொள்வதாக தெரியவில்லை. அழகியல் சிந்தனை என்பது ஆரோக்கியமான உளநலத்திற்கு துணை செய்யவல்லது.
இந்த குடிநீர்க் குழாயின் நிலைமையை கருத்தில் எடுத்து உரியவர்கள் மாற்றங்கள் காண முயற்சிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |