மாந்தை மேற்கில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பொது வளங்களை முகாமை செய்தல் திட்டம்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பத்து இடங்களில் பொது வளங்கள் முகாமைத்துவம் செய்தல் திட்டத்தின் கீழ் நன்னீர் மீன் பிடியை ஊக்குவிப்பதன் மூலம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வருமானங்களை அதிகரிப்பதற்கான செயற்றிட்டம் இன்று (18) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மீன் குஞ்சுகள் வைப்பு
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜெர்மன் அரசாங்கத்தின் நிதி உதவி கீழ் விழுது நிறுவனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு செய்யப்பட்டு வருகின்ற குறித்த செயற்திட்டத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட குளங்கள் மற்றும் தொட்டிகளான சின்ன விளாங்குழி, பெரிய விளாங்குழி, தாமரைக்குளம், மினுக்கன், நெடுங்கண்டல், கன்னாட்டி, சாளம்பன், குமனாயங்குளம், இசங்கங்குளம், காத்தான்குளம் ஆகிய குளங்கள் மற்றும் தொட்டிகளுக்கு 1,14,000 மீன் குஞ்சுகள் வைப்பு செய்யப்பட்டன.

அத்தோடு தொட்டிகளில் உள்ள மீன்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் எல்லா குளங்களுக்கும் மீன் அறுவடை செய்வதற்கான வலைகளும் கையளிக்கப்பட்டது.
நிகழ்வு ஆரம்பித்து வைப்பு

குறித்த மீன் குஞ்சுகள் வைப்பிலிடும் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் அன்ரனிஸ், சிறப்பு விருந்தினராக GIZ- SCOPE , சிரேஷ்ட ஆலோசகர் சொர்ணம் பெர்னாண்டோ, கௌரவ விருந்தினர்களாக காத்தான்குளம் பங்கு தந்தை செல்வநாதன் பீரிஸ், விழுது அமைப்பின் ஊழியர்கள், NAQDA ஊழியர்கள், கிராம அலுவலர் ,அபிவிருத்தி உத்தியோகத்தர், மாதர் அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதி நிதிகள், கிராம அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு வைபவ ரீதியாக மீன்களை விடும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

