மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் குதித்த பொதுமக்கள் (Photos)
மட்டு - தாமரைக்கேணி பகுதியில் தனியார் கல்வி நிறுவனங்களை இடமாற்றுமாறு கோரி வீதியை மறித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டமானது இன்று(05) பிற்பகல் 04 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்வி கற்பதற்கு வரும் மாணவர்களால் அப்பகுதி மக்கள் பெரும் துன்பங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
இதனால் அப்பிரதேச மக்கள் ஒன்று திரண்டு தாமரைக்கேணி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் குறுக்கு வீதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றிற்கு கல்வி கற்பதற்காக வந்த மாணவர்களை அங்கு செல்ல விடாது மாணவர்களை தடுத்து நிறுத்தி வகுப்பு நடக்காது என கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பில் தாமரைக்கேணி கிராம அபிவிருத்திசங்க செயலாளர் தெரிவிக்கையில்,
“இப்பகுதியில் அதிகமான தனியார் கல்வி நிறுவனங்கள் (ரியூடரிகள்) ஒழுங்கான முறையில் இல்லாமல் எல்லோரும் ஒரு தொழில் முயற்சியில் செய்கின்ற மாதிரி ரியூட்டரி வைத்திருக்கின்றனர்.
ஒழுங்கான வாகனதரிப்பிடம் இல்லை மாணவர்களுக்கு மலசல கூட வசதிகளும் இல்லாமல் பணம் உழைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் இவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றது. அதேவேளை இந்த ரியூட்டரிகளுக்கு அனுமதிபத்திரம் இன்றி நடத்ததி வருகின்றனர்.
இதனால் இந்த பகுதியில் வசிக்கின்ற மக்களுக்கு சரியான இடையூறு ஏற்பட்டுள்ளது குறிப்பாக ரியூட்டரிக்கு வருகின்ற மாணவர் மட்டுமல்ல வெளியால் இருந்து சும்மா வந்து எந்த விதமான வாகனமும் செல்லமுடியாதவாறு இந்த வீதியை மறித்து கொண்டு வீதிகளால் செல்லமுடியாதவாறு வேகமாக மோட்டர் சைக்கிள்களை ஓட்டிவருவதால் இந்த பகுதி மக்கள் சரியான முறையில் வீதியால் போக்குவரத்து செய்யமுடியாது உள்ளது.
அது மட்டுமல்லாது குறுக்கு வீதிகளில் இளைஞர்கள் கஞ்சா, சிகரெட் மற்றும் மதுபானங்களை குடித்துக்கொண்டு தகாத வார்த்தைகளை பேசுகின்றனர் இதனால் இப்பிரதேச மக்கள் இதனை தட்டிக்கேட்க சென்றால் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளுகின்றனர்.
எனவே இதற்கெல்லாம் காரணம் இவ்வாறான ரியூட்டரிகள் இந்த இடங்களில் நடத்துவதால்தான் இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியும் எந்த தீர்வும் இதுவரை இல்லை எனவே இந்த ஆர்பாட்டத்தை தாமரைக்கேணி கிராம அபிவிருத்திசங்கம் பொதுமக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுகின்றோம் என்றார்”
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்ட இடத்துக்கு மட்டு. தலைமையகக் பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி கே.பி ஹட்டியாராச்சி உட்பட பொலிஸார் ஆர்ப்பாட்டகாரர்களுடன்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர் குறித்த தனியார் கல்வி நிறுவனத்தை சென்று
பார்வையிட்ட பின்னர் தனியர் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களை அழைத்து கலந்துரையாடி தீர்வு
பெற்றுதருவதாக உறுதியளித்தார்.



