பொது நிதி நாடாளுமன்றக் குழுவின் புதிய தலைவராக ஹர்ச டி சில்வா நியமனம்
பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (CPF) புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவின் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு(கோப்) மற்றும் பொது கணக்குகள் குழு (கோபா) ஆகியவற்றின் புதிய தலைவர்களின் பதவிகளில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு குழுக்களுக்கும் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை எரான் விக்ரமரத்னவையும், கபீர் ஹாசிமையும் நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழ், பொது கணக்குகள் குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் அந்த குழுவின் தலைவராக அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்கும் வகையில் நிலையியற் கட்டளை மாற்றப்பட்டது.
கோப் மற்றும் கோபா தலைவர் பதவிகள்

இந்தநிலையில் எதிர்க்கட்சியின் கோரிக்கையின்படி, கோப் மற்றும் கோபா தலைவர் பதவிகள் எதிர்க்கட்சிக்கு செல்ல வேண்டும் என்று குறிப்பிடும் வகையில் நிலையியற் கட்டளைகள் திருத்தப்பட வேண்டும்.
கடந்த ஜூன் மாதம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, இந்த திருத்தங்களை நிலையியற் கட்டளைகள் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு இணக்கம் காணப்பட்டது.
எனினும், அது இன்னும் நிலையியற் கட்டளைகள் குழுவிற்கு பரிந்துரைக்கப்படவில்லை என்று எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லச்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் பொது கணக்குகள் குழுவுக்கு தலைவராக இருந்திருந்தால், குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே நாடு திவாலாகப் போகிறது என்பதை தெரிந்திருக்கமுடியும்.
டலஸ் அழகப்பெரும பிரதமர் தினேஸ் குணவர்தனவிற்கு கடிதம்

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராக தம்மை ஆதரித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதமர் தினேஸ் குணவர்தனவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
தானும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும் நாடாளுமன்ற அலுவல்கள் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களான நாலக கொடஹேவா மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் பொது நிதி தொடர்பான குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அழகப்பெரும தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் முன்னாள் கோப் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தனக்கு ஆதரவளித்ததாகக்
கூறப்படுவதால், புதிய கோப் குழுவில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தனக்குத்
தெரியவந்துள்ளதாக அழகப்பெரும தெரிவித்துள்ளார்.