களுவாஞ்சிகுடி பேருந்து நிலையத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பேருந்து தரிப்பு நிலையம் குன்றும் குழியுமாக மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசிவருவதனால் பிரயாணிகளும், வர்த்தகர்களும் மிகுந்த அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பிரதான பேருந்து தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில், பொலிஸ் நிலையம், வலயக்கல்வி அலுவலகம், கோட்டக்கல்வி அலுவலகம், நீதிமன்றம், பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம், தேசிய பாடசாலை, மற்றும் பல்வேறு கடைத்தொகுதிகளும் காணப்படுகின்றன.
மக்களின் கோரிக்கை
இருப்பினும் , சுகாதார சீர்கேடாக காணப்படுகின்ற இந்த பேருந்து தரிப்பு நிலையத்தை சம்மந்தப்பட்டவர்கள் இதுவரையில் கண்டுக்கொள்ளாமல் இருப்பது கவலையளிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே, துர்நாற்றம் வீசும் இந்த பேருந்து தரிப்பு நிலையத்தை சீர் செய்து சுற்றாடலைப பாதுகாப்பதோடு, பிரயாணிகளின் ஆரோக்கியத்திற்குமாக சம்மந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





