கோட்டாபய அரசை ஆதரித்த முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு பகிரங்க சவால்
அரசாங்கத்திற்கு வாக்களித்த சிறுபான்மைத் தரப்பினருக்கு என்ன கிடைத்தது? அந்த முஸ்லீம் மக்களின் அடிப்படை உரிமையான ஜனாசா எரிப்பதை நிறுத்த முடியாத நீங்கள் அபிவிருத்தியைப் பெற்றுக்கொடுத்தும் பலனில்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
அம்பாறை ஊடக அமையத்தில் இடம்பெற்ற சமகால அரசியல்தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்...
தமிழ் பேசும் மக்களில் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து இன்று 20வது திருத்தச்சட்டத்திற்கு வாக்களித்துள்ளனர்.
எதற்காக வாக்களித்தார்கள் என்பது பலருக்கு இன்றும் தெளிவில்லை.கடந்த காலத்தில் வரவு-செலவுத் திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கிய நிலையில், கம்பெரலிய திட்டத்தினூடாக 60 கோடி ரூபா வேலைத்திட்டம் செய்யப்பட்டது.
தற்போது அரசாங்கத்திற்கு வாக்களித்த சிறுபான்மைத் தரப்பினருக்கு என்ன கிடைத்தது? அந்த முஸ்லீம் மக்களின் அடிப்படை உரிமையான ஜனாசா எரிப்பதை நிறுத்த முடியாத நீங்கள் அபிவிருத்தியைப் பெற்றுக்கொடுத்தும் பலனில்லை.
எவ்வாறு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க போகின்றீர்கள்? இஸ்லாமிய மக்கள் மறு உலகில் சிறப்பாக வாழ வேண்டுமென்பதற்காகவே இவ்வுலகில் சிறப்பாக வாழ விரும்புகின்றனர்.
இவ்வுலகில் அவர்கள் 4 கடமைகளைச் செய்ய வேண்டும். இதையாவது செய்ய விடாமலிருக்கின்ற நிலையில், 20வது சீர்திருத்தத்திற்கு வாக்களித்தோ அல்லது ஆதரவு தெரிவித்தோ எந்தப்பலனும் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை, இதனை நீங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
என்ன கொங்கிறீட் பாதை போட்டாலும், அதனூடாக ஜனாசாக்களைக் கொண்டு செல்ல முடியவில்லையெனின் அர்த்தமில்லை.
இதனால் அம்மக்கள் விரைவில் நீங்கள் செய்த தவறுகளுக்கு பாடம் படிப்பிப்பார்கள் என்பதை விரும்புகின்றேன் என மேலும் தெரிவித்தார்.