மீண்டும் நடைபெறவுள்ள தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கூட்டம்: சி.வி.விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) தமிழர் தரப்பில் இருந்து ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பான கூட்டமொன்று நடைபெற்ற நிலையில் பல அரசியல்வாதிகள் பங்கேற்காமையால் மீளவும் கூட்டமொன்றை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் (C.V.Vigneswaran) தெரிவித்துள்ளார்.
நேற்றைய (12) கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமிழ் மக்கள்
மேலும் தெரிவிக்கையில், “பொது வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாட நாங்கள் ஒரு கூட்டத்தை கூட்டியுள்ளோம். இதில் சிவில் சமூகத்தினர் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் பங்குபற்றியுள்ளார்கள். எனினும், பலவித காரணங்களால் அரசியல் தலைவர்களால் கலந்து கொள்ள முடியாமல் போயுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் நான் மட்டுமே ஒரு அரசியல்வாதியாக கலந்து கொண்டுள்ளேன். கலந்துரையாடலின் போது பொது வேட்பாளர் சம்பந்தமான கருத்துக்களை நாங்கள் அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்துள்ளோம். வருகைதந்த அனைவருமே பொது வேட்பாளரை நிறுத்துவதன் அவசியம் தற்போது தமிழ் மக்களுக்கு இருக்கின்றதென்பதை கூறி அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில், நாங்கள் அடுத்த கூட்டத்திலே அரசியல் தலைவர்களையும் அதிகளவிலான சிவில் சமூகத்தினரையும் இணைத்து கொண்டு தமிழ் மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்க கூடியவர்களையும் உள்வாங்கி அவர்களினூடாக இது சாத்தியமான விடயமா இல்லையா என்ற பல விடயங்களையும் பேச இருக்கின்றோம்.
பொதுக்குழு
மேலும், நாங்கள் யாரோ ஒருவரை தேர்ந்தெடுக்கக்கூறி அவரிற்கு வாக்களிக்கும் எண்ணத்தில் மக்கள் இருக்கின்றார்களா என்றொரு கேள்வி பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் எழுந்தது.
அதற்கு நாங்கள யாரையும் தெரிவு செய்யவில்லை. முதலில் பொதுக் குழுவை கூட்டி பொதுக் குழுவில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுப்போம் என்று கூறிய போது அவர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதாக அமைந்திருந்தது.
இந்த கலந்துரையாடலானது பூர்வாங்க ஆராய்வாகத்தான் இருந்துள்ளது. இந்த ஆராய்வின் அடிப்படையில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற திடமான கருத்து எல்லோரிடமும் காணப்பட்டுள்ளது.
இதன்பின் எந்தளவிற்கு வலுவுறும் என்பது அடுத்த கூட்டத்தில் தான் தெரியவரும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |